Sunday, January 24, 2010

முதுகினில் தெரியும் முகம்

மணி 1:30 இருக்குமா,

இரவின் நிசப்தத்தை களைத்தவாறு என்னை இறக்கிவிட்டு அந்த பஸ் நகர்ந்தது, சேர்மன்வாடியை சற்றே தாண்டியவுடனான வளைவில் வெளிச்சத்தை தன்னோடு எடுத்து சென்று விட்டிருந்தது. கணமான பையுடன் தனிமையில் நின்றேன். கல்லூரியில் சேர்வதற்காக ‘டொனேஷன்’கட்ட கொண்டு வந்திருந்த எட்டாயிரம் ரூபாய் பையில்.


மையிருட்டு - வானமும் உறக்கத்தில், நாயின் மெல்லிய முனகல். எதிர் பக்கத்திலிருந்து வந்த கல்யாண வேன் ஒன்று தனது அழுத்தப்பட்டிருந்த ஜன மூட்டையிலிருந்து ஒருவரை துப்பிவிட்டு சுவடுகளின்றி சென்று விட்டது. அவர் என்னை போல் பயந்தவராக தெரியவில்லை மடியில் கணமில்லாமல் இருக்கலாம், மேலும் அவர் முதுகினில் முகம் தெரியவில்லை. அவரின் இருப்பை தெரிவித்த ‘சரட்’ ‘சரட்’ ஓசை பலமாய் ஒலித்தது
சற்றே இடைவெளியில் நான் எனது பாதையில் நடக்கத்துவங்கினேன்.


சட்டென எதிரே இரண்டு பளிங்கிகள் மின்னின, ‘சரட்’ சத்தம் கேட்டு கண் முழித்து பார்த்தது நேற்று குட்டிகள் ஈன்ற பூனை ஒன்று. இடப்பக்கம் உள்ள சந்தில் அவர் சென்றுவிட்டிருந்தது ‘சரட்’ சத்தம் தேயத்துவங்கியதில் இடது பக்கம் உள்ள காதுக்கு சற்று அதிகமாகவே விளங்கியது. ஆடுகளின் இரத்த வாடையையும் மீறி மொச்ச வாடை அடித்தது, ஓஹ்! செக்கடி பள்ளியை நெருங்கியாச்சி.


கல்லூரியின் இரண்டாம் வருடத்தின் துவக்கத்தில் அந்த மாத முடிவில் தன்னை தானே முடிந்து முடித்து கொண்ட நிஜாமின் நினைவு வந்தது. நான் தினமும் கல்லூரிக்கு செல்வதற்காக நடந்து வந்து புதுமனை தெருவில் இறங்குகையில் எதிரில் இருக்கும் வீட்டிலிருந்து அவனின் புன்னகை ஒரு புத்துணர்ச்சியை கொடுக்கும், இனி எனக்கும் இல்லை அது. ஏன் அப்படி செய்து கொண்டான் இன்று வரை தெரியலை.


செக்கடி குளத்தின் வலது மேற்புறத்தின் ஓரத்தில் சுழிந்து குழாய்குள் நீர் புகுவது இரைச்சலாக கேட்டது, சென்ற வாரம் அதில் தவறி விழந்த 5 வயது சிறுவனின் தாயின் அழுகையும்.


இரவு நேரத்தில் ஞாபகத்திற்கு வரக்கூடாத விடயங்களாக வந்து சென்றன. இன்னும் நடந்துகொண்டிருக்கின்றேன். எதிரில் சிறு நெறுப்பு அணைவது போல் போய் மீண்டும் கணங்குகிறது, நானும் அதுவும் ஒன்றை ஒன்று நெருங்கிகொண்டிருந்தோம். சற்று முன்னரே எழுந்துவிட்ட பய பந்து மேலும் சுழன்றது, தைரியமெல்லாம் வரவில்லை இருப்பினும் நடந்தேன். நெருங்கிவந்த நெருப்பு அந்த நபரின் வாய் வழியாக அவரின் உயிரை உறிஞ்சி கொண்டிருந்தது. புகையுடன் என்னை பார்க்க முயற்சி செய்துவிட்டு நெருப்பு கடந்து சென்று விட்டது. தயக்கங்களுடனும் பயத்துடனும் நடை போட்டு கொண்டிருந்தேன்,


சன்னமாக கொலுசுகளின் சிரிப்பு , அதோடு மல்லிகைப்பூ வாசம் ஜன்னல் வழியாக தவழ்ந்து எனது நாசியை அடைத்தது. ஓஹ்! கப்பகாரவோ வூடு வந்தாச்சா - நேற்று தான் அந்த வீட்டு மாப்பிள்ளை வந்திருந்தார். இன்னும் இரண்டு சந்துகள் தான் வீடு நெருங்கி விடும்


“பூவில் வண்டு கூடும் கண்டு பூவும் கண்கள் மூடும்...

“இந்த பாட்டு ... அட மொபைல் ..., சட்டென விழித்து எழுந்தேன்


“மாமா - சேர்மன் வாடி வந்துட்டேன்”
“சரி அங்கேயே இரு இதோ பைக் எடுத்துகிட்டு வாறேன்”


மணி பார்த்தேன் 1:27:53 ...