Saturday, May 3, 2014

பள்ளிக்கால கதைகள்

வானிலை அறிக்கை

ஒரு வார காலமாக பெய்து கொண்டிருக்கும் மழை இன்று வராது, வானம் வறண்ட
நிலைகொண்டிருக்கும்.

கிழக்கு பக்கம் உள்ள பள்ளிக்கூடங்களில் 10 மணி முதல் சில நிலவுகள் காட்சி தரலாம்

மணி 7 தாண்டியாச்சு 11ஆவது படிக்கிற புள்ள இன்னும் தூங்கறது பாரு”

“எந்திரி! எந்திரி!”

“ஆஹா! வழமை போலவே நேரம் ஆகிவிட்டதே!”

வேகமா எழுந்து குளியலறைக்குள்  தாழிட்டு கொள்ளாமல் பல் துலப்பானில்
கோல்கேட்டை நிரப்பி, துவாலையும் கைலியும் எடுத்து கொண்டு

காவேரியை நோக்கி ...


வாரம் முழுதும் விடாமல் பெய்து கொண்டிருந்த மழையால் பள்ளிகளுக்கு விடு
முறை விட்டனர் அதுவும் 9:30 மணியளவில் பள்ளிக்கு வந்து முதல் வகுப்பு
நிறைவடைந்த பின் விடுப்பு.

விடுமுறை பள்ளிக்குதான் விட்டார்கள்
மழையுமல்லவா விடுப்பு எடுத்து கொண்டது.
வலிமையான கரங்களை நிறுத்தி கொண்டு, மெல்ல தூறலானது

“டேய்! கிருபா புதுப்படம் வந்திருக்குடா - போலாமா!”

“ஹைய்யா! போலாம் போலாம்”

“ஜே! எங்கேடா”

“கணினி லேபில் சார் கூட பேசிகிட்டு இருக்காண்டா”

வகுப்பறையை தவிர மற்ற இடங்களில் நண்பர்களாக பழகும் சீனி மற்றும் R.V.K
சாருடன் பேசி கொண்டிருந்தேன்


“என்ன சார்! ஸ்கூலு விட்டவொன்னே மழையும் விட்டுடுச்சி, போர் அடிக்குமே!”

“R.V.K படத்துக்கு போகலாமா”

“போகலாம் சீனி - ஜே! நீயும் வர்றியா”

“R.V.K அவங்க போகட்டும், நாம் டீச்சர்ஸா போவோம்”

அதுக்குள்ளே கிருபாசங்கர் என்ற கிருபா அங்கே வந்தான்

“சார்! மே ஐ கம் இன்”

“வா! வா! என்ன கிருபா படத்துக்கா”

“ஆமாம் சார்”

“என்ன படம்”

“வைகாசி பொறந்தாச்சி”

“அதுதான் வருசா வருசம் பொறக்குதேடா - சரி சரி நீங்க கிளம்புங்க, R.V.K
நாம வேற படத்துக்கு போவோம்”

ஆங்காங்கே குழுக்களாக பேசி கொண்டிருந்தனர் மாணவர்கள்.

பெரும் பாலான மாணவிகள் சைக்கிளை எடுத்து கொண்டு வீட்டிற்கு கிளம்பிவிட்டனர்.

“செந்தில் - எவ்வளவு பணம் இருக்கு, யார் யார் வாறாங்க”

“15 பேராவது வருவாங்கடா, பணம் அவ்வள ...”

“சரி நீங்க எல்லோரும் தியேட்டர் போயிடுங்க நான் சிராஜ் அண்ணன் கிட்ட பணம்
வாங்கிட்டு வந்துடறேன் - பியர்லஸ் தானே”

“ஆமா மாப்ள”

“சாதிக் வர்றான்ல”

“வர்றேன் மாப்ள- டிக்கெட் எடுக்கனும் - அதானே”

மழை தூறலை இரசித்தபடியே வேகமாக பஸ் ஸடாண்ட் நோக்கி நடந்தேன். P.U.P
டைலர்ஸில் தான் அண்ணன் இருக்கும் இச்சமயத்தில்.
சற்று தூரம் கடந்தவுடன் அட! அதோ அண்ணன் இப்பதான் போறாங்க போல

“சிராஜ்! சிராஜ்!”

“என்ன ஜே! இந்த நேரத்தில் பள்ளிக்கூடம் விட்டுட்டாங்களா”

“ஆமாண்ணே! பசங்க எல்லாம் படத்துக்கு போ ...”

“ம்ம்ம் ... எவ்வளவு வேணு... சரி இந்தா 100 ரூவா! போதுமா”

“ஹி ஹி, போதும் அண்ணே நேரம் ஆகுது நான் வர்றேன்”

“சாப்பிட வருவியா”

“எடுத்துட்டு வந்த சாப்பாடு இருக்கு, படம் முடிந்தவுடன் குத்தாலம் போய்டுவேன்”

“ம்ம்ம் ... சரி”

பசங்க இன்னும் கிளம்பி இருக்க மாட்டாங்க என நினைத்து கொண்டு பள்ளி நோக்கி
வேக நடை போட்டேன்.

S.T.Pauls பள்ளியை கடந்த பின் தினமும் பஸ்ஸில் பிரயாணம் செய்யும் போது யாரோ
தன்னை கவனிப்பது போல் தோன்றும் அது போலவே அப்பவும் தோன்றியது.

மெல்ல திரும்பி பார்த்தேன்

சென்ற வாரம் தொலைக்காட்சியில் பார்த்த மிருதங்க சக்கரவர்த்தி மனதிலே
ஆவர்த்தனம் செய்தார்

இது என்ன இன்று

மேகம் கறுத்து இருப்பதால்
பகலில் நிலவு முகம் காட்டுகிறதோ

வானம் மழை நீரை மட்டுமல்லாது
ஒரு
தேவதையையும் தரைக்கு இறக்கிவிட்டிருந்தது

தேவதையின் கையில் ரோஜா
அட இதென்ன கருப்பு ரோஜா
அதுவும் இத்தனை பெரிதாக

ஓஹ்! குடையா.

கார்மேகமென நினைத்து
கூந்தலுக்குள் ஒளிந்து கொள்ள
இடம் தேடின தூறல்கள்

என் பார்வையில்
உருகி கொண்டிருந்த தேவதையை
மேலும் நினைய விடாமல்
போர் செய்து கொண்டிருந்தது அந்த குடை

“மழையா இருக்கே குடை தாறியளா”

“இந்தாங்க தாராளமா எடுத்துக்கோங்கோ”

இவை எங்களின் மனக்குரல்கள்

பேசிக்கொள்ளும் தூரத்தில் நாங்கள் இல்லை

சாலைகளின் எதிர் திசையினில் இருந்தோம்.

வில்லன்களாக பேருந்துகள் குறுக்கே சென்ற வண்ணம் இருந்தன, உபரியாக
சத்தமிட்டு ஹாரனித்தன

நான் கைநீட்டி கேட்பதுபோல் சைகை செய்ய

தேவதை எடுத்துகொள் என்று கருப்பு ரோ ... ச்சே ச்சே குடையை நீட்டியது

சந்தோஷப்பூக்கள் மனமெங்கும் பரவ
புன்னகையாக உதடு வழி வெளி வந்தது.

தலையை சிலிப்பிகொண்டு பள்ளியை நோக்கி வேக நடை போட்டேன் ...

கண்மணியே காதல் என்பது
கற்பனையோ காவியமோ
கண் நிறைந்த ஓவியமோ!
எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில் ...

பாடல் காற்று வழி தவழ்ந்து வந்தது ...

No comments:

Post a Comment